காதல் தரும் அனுபவங்களை கேட்டிருக்கிறேன், ஆனால் அனுபவித்ததில்லை. முதல் முறை அனுபவிக்கிறேன்.
அது உயிரை கிள்ளும் வேதனை, ஆனால் சுகமான வேதனை!
அது நெஞ்சை பிசகும் வலி, ஆனால் இன்பமான வலி!
மாரடைப்பை ஏற்படுத்தும், அவளின் நினைவுகள் நிறைத்து கொண்டதால்!
மொட்டாய் ஆரம்பித்த பரிமாற்றம்,
மலராய் மலர்ந்து இதயத்தில் மணம் வீசுகிறது.
விதையாய் தொடங்கிய சிநேகம்,
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
வேராய் ஊன்றி இதய நிலத்தை கட்டி போட்டிருக்கிறாள்!
நான் நேசிக்கும் இதயம் என்பதை விட
என்னை நேசிக்கும் இதயம் என்பதில் கர்வம்.
அவள் எனக்காக செய்யும் செயல்களில் ஒரு பெருமிதம்.
அவளுடன் பேசும் போது சுகம்!
அவள் புன்னகைப்பதை பார்ப்பதில் சுகம்!
அவளை நினைக்கும் போது சுகம் - நினைவுகள்
அனைத்தும் அவள் ஆனதால் அது நீங்காத சுகம் !
அவளுடன் பேசும் போது ஒரு பரவசம் - பேசி முடிக்கும்
போது பிரிய மனமில்லாமல் இன்னும் தொடர ஏங்கும் மனம்.
அவள் என்னையே நினைக்க எண்ணும், நான் நேசிப்பதை
விட என்னை அதிகம் நேசிக்க விரும்பி பேராசை கொள்ளும் மனம்.
அவள் மேல் கொள்ளும் சிறு சிறு ஊடல்கள் சில
மணி நேரம் கூட தொடர்வதில்லை.
அவள் என்னுள் வந்த பின் நிஜ உலகிற்கு
எப்போதாவது தான் வந்து செல்கிறேன்.
வாழ்வின் புதிய பரிமாணத்தை உணர்கிறேன்.
இது இன்பமா, சுகமா, வலியா, வேதனையா,
இம்சையா எதுவென்று தெரியாவிட்டாலும் அதை
முழுவதுமாய் ரசிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment